×

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு

 

மேட்டுப்பாளையம், நவ.24: கோவை,நீலகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.மேலும்,மரங்களும் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அவ்வழியே சென்ற இரு அரசுப்பேருந்துகள் மற்றும் ஒரு லாரி சேற்றி சிக்கிக்கொண்டன.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  பின்னர்,ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக மண் சரிவு அகற்றப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சென்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

மேலும், அரசுப்பேருந்துகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் போராடி காவல்,தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மண் சரிவு மற்றும் மரங்களை அகற்றி சாலையை சீரமைத்தனர். இதனையடுத்து சுமார் 10 மணி நேரத்திற்கு பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக அரசுப்பேருந்துகளும், இன்ன பிற வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. நீண்ட நேரமாக பேருந்துகள் இயக்கப்படாததால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல காத்திருந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

The post மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Kothagiri ,Coimbatore ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...